திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.45 திருக்கைச்சினம்
பண் - சீகாமரம்
தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவே வேந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
1
விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.
2
பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.
3
பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொல்நகரம் மூன்றுடனே வெந்தவியக்
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.
4
தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்(*)நஞ் சுண்டனங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

(*) நஞ்சுண்டு-அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப் பொருள் கொள்க.
5
மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.
6
வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.
7
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
காதலினர் மேவியுறை கோயில் கைச்சினமே.
8
மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரயனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்
விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com